6 ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளி பெண் பலி: அயர்லாந்தில் கருக்கலைப்பு மீது பொது வாக்கெடுப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர்(வயது 31). இவர் அயர்லாந்து நாட்டில் வசித்து வந்தார்.

Update: 2018-05-26 21:30 GMT
டப்ளின், -

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர்(வயது 31). இவர் அயர்லாந்து நாட்டில் வசித்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர் உடல் நலக்குறைவு காரணமாக தனது வயிற்றில் வளரும் 17 வார கருவை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சட்டப்படியும் போராடினார்.

ஆனால் கருக்கலைப்புக்கு தடை விதித்துள்ள அயர்லாந்து நாடு அவருடைய கோரிக்கையை நிராகரித்தது. இந்தநிலையில், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு 2012-ம் அக்டோபர் மாதம் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது உலக நாடுகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா? வேண்டாமா? என்பது பற்றி பொதுவாக்கெடுப்பு நடத்த அயர்லாந்து முடிவு செய்தது.

அதன்படி நேற்றுமுன்தினம் பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் சுமார் 35 லட்சம் பேர் ஓட்டுப் போட்டனர்.

இந்த பொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவாக 68 சதவீதம் பேர் ஓட்டுப்போட்டதாக வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவு கிடைத்தால் அயர்லாந்து நாடு அதை சட்டமாக பிறப்பிக்கும். இது மரணமடைந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிடைக்கும் மிக பெரிய கவுரவமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்