உலகைச்சுற்றி...

துருக்கியின் அண்டால்யா மாகாணத்தில் அகதிகள் 15 பேருடன் கடலில் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது.

Update: 2018-06-03 23:00 GMT
* வடகொரியா அணுஆயுத ஒழிப்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதை நிரூபித்தால் மட்டுமே அந்நாடு நிவாரணம் பெற முடியும் என்றும், அதுவரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த அனைத்து தீர்மானங்களும் வடகொரியா மீது அமல்படுத்தப்படும் என்றும் அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மாட்டிஸ் கூறினார்.

* ஆப்கானிஸ்தானில் வறுமை, பாதுகாப்பு அச்சுறுத்தல், இன பாகுபாடு மற்றும் உள்நாட்டு போர் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு முதல் தற்போது வரை 30 லட்சத்து 70 ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்கல்வியை இழந்துள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் யோசெமிட்டி தேசிய பூங்காவில் ‘எல் கேப்பிடன்’ என்ற பெயர் கொண்ட மிகப்பெரிய பாறை உள்ளது. 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்த பாறை பார்ப்பதற்கு மலை போல் காட்சி அளிக்கும். கடந்த சனிக்கிழமை மலை ஏறும் வீரர்கள் இந்த பாறையின் உச்சி மீது ஏற முயன்றனர். அப்போது அவர்கள் கால் இடறி கீழே விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* துருக்கியின் அண்டால்யா மாகாணத்தில் அகதிகள் 15 பேருடன் கடலில் சென்ற படகு திடீரென கவிழ்ந்து மூழ்கியது. இதில் 9 பேர் உயிர் இழந்தனர். 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமாகினார்.

* தாய்லாந்தின் சோங்லா மாகாணத்தில் உள்ள ஒரு கால்வாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீந்த முடியாத நிலையில் ராட்சத திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியது. கடற்படை அதிகாரிகள் அதனை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் அதனை உடற்கூறு ஆய்வு செய்தபோது அதன் வயிற்றில் 8 கிலோ அளவில் 80 பாலீதின் பைகள் இருந்தது தெரியவந்தது. பாலீதின் பைகளை உண்டதன் காரணமாகவே அந்த திமிங்கலம் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

* பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் இஸ்ரேலை நோக்கி 4 ராக்கெட்டுகளை வீசியதாகவும் அவற்றில் 3 ராக்கெட்டுகள் நாடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்ட நிலையில், ஒன்று தரையில் விழுந்து வெடித்தாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் இதற்கு பதிலடி தரும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் வான்தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்