ரூ.63 கோடி பரிசை திரும்ப அளிக்கும் அரச தம்பதி!

இங்கிலாந்து அரண்மனைத் திருமணங்களுக்கு யார் யார் என்ன பரிசளிக்கலாம் என்று திட்டவட்டமான விதிமுறைகள் உள்ளன.

Update: 2018-06-09 09:56 GMT
அன்பளிப்பு, மொய் வசூலுக்காகவே நிகழ்ச்சி நடத்துவோர் உண்டு.

ஆனால் இங்கிலாந்து அரச தம்பதி ஹாரி- மேகன் மெர்க்கல், தங்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.63 கோடி மதிப்பிலான திருமணப் பரிசுப்பொருட் களை திருப்பி அளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

இங்கிலாந்து அரண்மனைத் திருமணங்களுக்கு யார் யார் என்ன பரிசளிக்கலாம் என்று திட்டவட்டமான விதிமுறைகள் உள்ளன. ஹாரி- மேகன் ஜோடியும் தங்களுக்குப் பரிசுகள் வழங்க வேண்டாம், மாறாக அன்பளிப்பு அளிக்க விரும்புவோர், தாங்கள் குறிப்பிடும் சமூக சேவை நிறு வனங்களுக்கு நன்கொடை வழங்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால் அதையும்மீறி அரச தம்பதிக்கு பலரும் பரிசுகளைக் குவித்து விட்டனர். குறிப்பாக, பல்வேறு நிறுவனங்கள் விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு பரிசுகளை வாரி வழங்கியிருக்கின்றன.

அரச தம்பதிக்குத் தெரியாத நபர்கள் மற்றும் நிறுவனங்களால் பரிசுகள் வழங்கப்பட்டிருப்பது, விதிமுறைகளுக்கு முரணானது.

எனவே, பெருமளவிலான பரிசுகளைத் திருப்பி அளிக்க வேண்டிய நிலைக்கு ஹாரியும் மேகனும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி, 7 மில்லியன் பவுண்டு (ரூ. 63 கோடி) மதிப்பிலான பரிசுகள், அவற்றை வழங்கியவர்களுக்கே திருப்பி அளிக்கப்படவிருக்கின்றன.

பரிசு வழங்குவதில் தனி நபர், நிறுவனங்கள் எப்படியோ, நாடுகள் அதுதொடர்பான விதியை முறையாகப் பின்பற்றியிருக்கின்றன.

ஆஸ்திரேலியா நாடு ரூ.6.71 லட்சத்தையும், கனடா ரூ. 33 லட்சத்தையும், நியூசிலாந்து ரூ. 3.35 லட்சத்தையும் திருமண அன்பளிப்பாக வெவ்வேறு சமூக சேவை நிறுவனங்களுக்கு அனுப்பியிருக்கின்றன.

ஹாரி- மேகன் ஜோடிக்கு வந்து குவிந்த வித்தியாசமான பரிசுகளுக்குக் குறைவேயில்லை என்று இங்கிலாந்து அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன. உதாரணமாக, இத்தம்பதிக்கு என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நீச்சலுடைகளை ஒருவர் அனுப்பியிருந்தார்!

மேலும் செய்திகள்