உலகைச்சுற்றி...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

Update: 2018-06-11 22:45 GMT

* ஜப்பானின் கேடனா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட எப்.15 ரக அமெரிக்க போர் விமானம் ஒன்று ஒகினாவா கடலில் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த விமானியின் கதி என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

* சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி, வருகிற அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா, பிஜி, டோங்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த நேரத்தில், ஹாரி தோற்றுவித்த ‘இன்விக்டஸ் விளையாட்டு போட்டிகள்’ (காயமடைந்த ராணுவ வீரர்களுக்கானது) சிட்னியில் நடப்பது கூடுதல் சிறப்பு என கென்சிங்டன் அரண்மனை செய்தி வெளியிட்டு உள்ளது.

* பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் என்ஏ.243 (கராச்சி) தொகுதியில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித்தலைவருமான இம்ரான்கானை எதிர்த்து, சிந்து மாகாண சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் ஷேலா ராசா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூரில் நடக்கிறது. இந்த சந்திப்புக்கு முன் வடகொரியா, சிறையில் அடைத்துள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என அந்த நாட்டை சேர்ந்த ஐ.நா. அதிகாரியான தாமஸ் ஒஜியா வலியுறுத்தி உள்ளார்.

* அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை நாசமாக்கி உள்ளது. இதனால் அருகில் வசித்து வரும் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

* ஆப்கானிஸ்தானின் காபூலில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் வாசலில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்