அமெரிக்க கடற்படை ஊழலில் இந்திய பெண்ணுக்கு சிறைத்தண்டனை: சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

அமெரிக்க கடற்படை ஊழலில் இந்திய பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2018-07-06 23:30 GMT
சிங்கப்பூர், 

சிங்கப்பூரில் வசித்து வருபவர், குர்சரண் கவுர் ஷரோன் ரேச்சல் (வயது 57). இந்திய வம்சாவளிப்பெண். இவர் அமெரிக்க கடற்படையின் ஒப்பந்த வல்லுனராக செயல்பட்டு வந்தவர் ஆவார். இவர் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்தி, மதிப்பீடு செய்து முடிவு செய்கிற அதிகாரம் படைத்தவராக விளங்கினார்.

இந்த நிலையில் இவர் அமெரிக்க கடற்படையின் லஞ்ச ஊழலில் சிக்கினார்.

அதாவது, அமெரிக்க கடற்படையின் முக்கிய ரகசிய தகவல் ஒன்றை தெரிவிப்பதற்காக மலேசியாவை சேர்ந்த கடல்சார் சேவை நிறுவனமான கிளென் டிபன்ஸ் மரைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லியோனார்டு கிளென் பிரான்சிஸ்சிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.65 லட்சம்) லஞ்சம் பெற்றார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ரேச்சல் மீது சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி சைபுதீன் சருவன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

மேலும் ரேச்சல் பெற்ற லஞ்ச பணத்தை சிங்கப்பூர் ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்