அலுவலகத்திலேயே காதலித்த பிரபலங்கள்

அலுவலகங்களில் வேலையோடு காதலும் அரும்புகிறது. வேலையோடு சேர்த்து காதலையும் புத்திசாலித்தனமாக நகர்த்தி கல்யாணத்தில் கொண்டுபோய் சேர்த்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

Update: 2018-07-08 11:25 GMT
வேலையை போல் காதலையும் பொழுதுபோக்காக்கி இடையிலே கவிழ்த்து விடுகிறவர்களும் இருக்கிறார்கள். பணிபுரியும் இடத்திலே காதலித்து, அதில் உறுதியாக இருந்து, வெற்றி பெற்ற சில பிரபலங்களை பற்றிய ஒரு அலசல்!

பராக் ஒபாமா - மிச்செல் ஒபாமா


(இருவரும் உலகறிந்த பிரபலம். பராக் ஒபாமா அமெரிக்காவின் முன்னாள் அதிபர்)

இவர்கள் இருவரும் இளம் வயதில் சிகாகோவில் உள்ள சட்ட அலுவலகம் ஒன்றில் பணியாற்றினார்கள். மிச்செல், அவருக்கு பயிற்சியளிக்கும் உயர் அதிகாரியாக இருந்தார். மிகவும் கண்டிப்பானவர். யாரிடமும் பிடி கொடுத்து பேச மாட்டார். திறமையாக பயிற்சியளிப்பவர். அவருடைய சுறுசுறுப்பு, அழகு, அறிவு எல்லாமே ஒபாமாவிற்கு பிடித்திருந்தது. ஆனால் அவர் தனது பயிற்சியாளர் என்பதால் அவரிடம் நெருங்கிப்பழகும் தைரியம் ஒபாமாவுக்கு வரவில்லை. மிச்செல்லுக்கும் அவர் மீது பெரிதாக ஈடுபாடு தோன்றவில்லை. விலகியே இருந்தார்.

ஒருநாள் அவரிடம், தனது மனதை திறந்துகாட்டும் ஆர்வத்தில் ‘நீங்கள் அழகாக சிரிக்கிறீர்கள்?’ என்றார் ஒபாமா. ‘அதை பற்றிய பேச்சு உங்களுக்கு இப்போது எதற்கு?’ கடுப்பாக திருப்பிக்கேட்டார், மிச்செல். அதோடு விடவில்லை. ‘இதோ பாருங்க மிஸ்டர் நீங்க வந்த வேலையை மட்டும் பாருங்க. அதுதான் உங்களுக்கு மரியாதை. என்னிடம் வீண் பேச்செல்லாம் வேண்டாம்’ என்று கோபமாக சொல்லிவிட்டு போனார். அப்படியும் ஒபாமா விடுவதாக இல்லை. அவரை விடாமல் பின் தொடர்ந்தார். ஒரு காலகட்டத்தில் மிச்செல்லும் காதலுக்கு சம்மதித்தார். மூன்று ஆண்டுகள் காதலித்துவிட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். பிற்காலத்தில் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியானதிலும் மிச்செல்லின் பங்கு உண்டு. இப்போதும் அவர்கள் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

பில்கேட்ஸ் - மெலிந்தா கேட்ஸ்

(உலக கோடீஸ்வரர் வரிசையில் இருக்கும் இந்த தம்பதியினர், சமூக சேவைக்கு பணத்தை அள்ளிக்கொடுப்பதிலும் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கிறார்கள்)

முதன் முதலில் அவர்கள் இருவரும் அலுவலக கருத்தரங்கு ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். பின்பு மீண்டும் மீண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அவர்கள் இருவருக்குள்ளும், ‘அவர்தான் உங்களுக்கானவர்’ என்பதுபோல் காதல் மணி அடிக்கத் தொடங்கியிருக்கிறது. பின்பு இருவரும் தயங்கித் தயங்கி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பில்கேட்ஸ்க்கு ெமலிந்தாவை ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. அதனால் தன்னோடு ஒரு நாள் இரவு உணவு சாப்பிட வருமாறு அழைத்தார். அப்போதே நிறைய மனம்விட்டுப் பேசினார்கள். அடுத்த ஆறு வாரத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி


இந்த ஆலிவுட் ஜோடிகளின் ‘புதிய’ காதல் 2004-ம் ஆண்டு பெரும் பரபரப்பை உருவாக்கியது. மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித் படப்பிடிப்பின் போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பிட் ஏற்கனவே திருமணமானவர். நடிகை ஜெனிபர் ஏனிஸ்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். இவருடைய புதிய காதல், மனைவியின் காதில் விழுந்தது. அவ்வளவுதான் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. இரண்டு நடிகைகளும் மோதிக் கொண்டனர். பிட் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். ‘மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வந்து என் முகத்தில் விழியுங்கள்’ என்று புதிய காதலி ஏஞ்சலினா கண்டிப்பாக கூறிவிட்டார். அடுத்த ஆறு மாதத்தில், பிட் மனைவியை விவாகரத்து செய்தார். ஏஞ்சலினாவோடு தேனிலவு கொண்டாட கென்யாவுக்கு கிளம்பிப்போனார்.

ராஜ்கபூர் - நர்கீஸ்

இந்தி திரை உலகில் ராஜ்கபூர் - நர்கீஸ் காதல் புகழ்பெற்றது. இருவரும் சேர்ந்து 16 படங்களில் நடித்தனர். ராஜ்கபூர் ஏற்கனவே கிருஷ்ணா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். கிருஷ்ணாவை விவாகரத்து செய்துவிட்டு நர்கீஸை திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். அதை முறியடிக்க அவரது தந்தை பிரித்விராஜ் பல்வேறு தடாலடியான முயற்சிகளை மேற்கொண்டார். கடைசியில் நர்கீஸ் தானே ராஜ்கபூரை விட்டு விலகிவிட்டார். பிறகு மதர் இண்டியா படத்தில் சுனில் தத்தை சந்தித்தார். அடுத்து அவர்கள் இருவரும் காதலித்தார்கள். திருமணமும் செய்து கொண்டனர். நிம்மதி பெருமூச்சுவிட்டபடி அவர்கள் திருமணத்திற்கு கிருஷ்ணா வாழ்த்து தெரிவித்தார்.

பில் கிளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி

பில் கிளிண்டன் அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்தவர். அவரது அலுவலகத்தில் மோனிகா வேலைபார்த்தார். இருவருக்குள்ளும் காதல் உறவு ஏற்பட்டது. அந்த தகவல் வெளியே கசிந்து, உலகம் முழுக்க பேசப்பட்டது. மோனிகாவும் அவ்வப்போது ஊடகங்களுக்கு தீனிப் போட்டுக் கொண்டிருந்தார். அவர் அதிகாரவர்க்கத்தால் மிரட்டப்படும் சூழலும் உருவானது. காதல் உண்மைதானா? என்று பில் கிளிண்டனிடம் கேட்கப்பட்ட போது, முதலில் அவர் மறுத்தார். ஆனால் ஆதாரங்கள் அடுக்கடுக்காய் வெளிவந்ததும், அது உண்மைதான் என ஒத்துக்கொண்டார். மோனிகா அவ்வப்போது ஆதாரங்களை அள்ளிவிட்டு, சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். காதலை காரணங்காட்டி பில் கிளிண்டனை பதவியில் இருந்து விலக்கவும் முயற்சி நடந்தது.

இதெல்லாம் ஒருபுறம் சூடாக நடந்துகொண்டிருக்க, பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கணவரின் முரண்பாடான காதல் தொடர்பால், அவரிடமிருந்து ஹிலாரி விவாகரத்து பெற்றுவிடுவார் என்றெல்லாம் புரளி கிளப்பப்பட்டது. அப்போது ஒருமுறை அவரிடம் கணவரின் செக்ஸ் லீலைகள் பற்றி கேட்டபோது, ‘அது அவரது தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிட விரும்பவில்லை’ என்று சிரித்துக்கொண்டே பேசி, கேள்வி கேட்டவரை திக்குமுக்காட வைத்து விட்டார்.

அலுவலக காதல் பற்றி அமெரிக்க நிறுவனம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது. இ்ந்தியாவில் அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களிடையே காதல் உருவாகுவது அதிகரித் திருப்பதாக அந்த சர்வே குறிப்பிடுகிறது.

மேலும் செய்திகள்