அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடும்வரை வடகொரியா மீதான பொருளாதார தடை தொடரும்: அமெரிக்க மந்திரி திட்டவட்டம்

அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடும்வரை வடகொரியா மீதான பொருளாதார தடை தொடரும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Update: 2018-07-08 23:00 GMT
டோக்கியோ, 

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு உழைப்பதாக சிங்கப்பூர் உச்சி மாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

இரு தரப்பும் ஒப்பந்தம் போட்டாலும், அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான வழிமுறைகள் பற்றி அதில் தெரிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர்களை சந்தித்து, அணு ஆயுதங்களை கைவிடும் வழிமுறைகள் பற்றி பேசிவிட்டு ஜப்பான் சென்றார்.

அவர் ஜப்பான் சென்றதும் வடகொரியா ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “வடகொரியாவின் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு தன்னிச்சையாக தாதா போன்று அமெரிக்கா அழுத்தம் தருகிறது. இது சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் நோக்கத்துக்கு எதிரானது” என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் டோக்கியோவில் மைக் பாம்பியோ நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடும் வரை, அதை இறுதியில் சோதித்து உறுதி செய்கிறவரையில், அந்த நாட்டின்மீது பொருளாதார தடை தொடரும்” என உறுதிபட தெரிவித்தார்.

மேலும் செய்திகள்