அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 2 பேர் சாலை விபத்தில் பலி

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 2 பேர் சாலை விபத்தில் பலியாகினர். #AmarnathYatra

Update: 2018-07-09 10:17 GMT
ஸ்ரீநகர்,

ஆண்டு தோறும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வர். கடந்த ஆண்டு இந்த யாத்திரையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இந்த ஆண்டு யாத்திரைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு ரேடியோ அதிர்வெண் பயன்படுத்தி யாத்ரீகர்களின் வாகனங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி துவங்கியது. அமர்நாத் யாத்திரை  ஆகஸ்ட் மாதம் இறுதி வரை  நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அமர்நாத் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அழைத்து வந்த வேன் ஒன்று குவாசிகண்ட் பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில், இரண்டு  பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர். லூதியானா பகுதியைச்சேர்ந்த சுரிந்தர் சிந்தா மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே,  யாத்திரை தொடர்பான பணிகளில் தன்னார்வலராக பணியாற்றிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். 
இந்த ஆண்டு யாத்திரை சென்றவர்களில் தற்போது வரை  17 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் செய்திகள்