இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவனை அமெரிக்க போலீஸ் வேட்டையாடியது

இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவனை கன்சாஸ் போலீஸ் வேட்டையாடியது. #SharathKoppu

Update: 2018-07-16 09:08 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் மிசூரி மாகாணம் கன்சாஸ் நகரில் உள்ள மிசவுரி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு படித்து வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சரத் கோப்பு (வயது 25) அங்குள்ள ஒரு ஓட்டலில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 6-ம் தேதி அவர் வேலைபார்த்த ஓட்டலில் நடந்த துப்பாக்கி சூட்டில், சரத் கோப்பு உயிரிழந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் சரத் கோப்புவை சுட்டு வீழ்த்திய கொள்ளையனை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சிசிடிவி காட்சிகளில் குற்றவாளியின் முகம் பதவிவாகியிருந்தது.

கொள்ளையன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம்) சன்மானமாக வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர். இதனையடுத்து தொடர்ந்து கொள்ளையனை போலீஸ் தேடிவந்தது.

இந்நிலையில் கிழக்கு கன்சாஸ் பகுதியில் கொள்ளையனின் நடமாட்டம் இருப்பதை அறிந்த போலீஸ் அவனை வேட்டையாட திட்டமிட்டனர். போலீஸ் நேற்று அவனை நெருங்கியதும் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போலீஸ் மற்றும் கொள்ளையன் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மூன்று போலீசார் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் போலீசார் அதிரடியாக செயல்பட்டு கொள்ளையனை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. 

குற்றவாளியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. காயம் அடைந்த போலீசாரின் உயிருக்கு எந்தஒரு பாதிப்பும் இல்லையென போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்