பள்ளி செல்லும் ‘அரை இதய’ அதிசயக் குழந்தை!

இங்கிலாந்தில் ‘அரை இதயத்துடன்’ பிறந்த அதிசயக் குழந்தை தற்போது பள்ளி செல்ல ஆரம்பித்திருக்கிறது.

Update: 2018-07-21 10:50 GMT
மைலா கர்ட்டிஸ் என்ற அக்குழந்தை பள்ளி செல்ல ஆரம்பித்திருப்பது குறித்து அதன் தாய் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் டிராய்ட்விச் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜேமி கர்ட்டிஸ்- ஜோஸ் ஸ்டீவன்ஸ் தம்பதியர். இவர் களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அரை இதயத்துடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போதுவரை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மைலா கர்ட்டிசின் பிறப்பு பற்றி அவரது தாயார் விவரித்துள்ளார்.

இதுகுறித்து, 26 வயதாகும் ஜேமி கூறும்போது, ‘‘நான் கர்ப்பமடைந்து 25 வாரங்கள் கழித்து குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக வூர்செஸ்டரில் உள்ள ராயல் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு, மருத்துவர்கள் குழந்தையின் இதய வளர்ச்சியில் குறைபாடு இருப்பதால், அதன் இயல்பான பிறப்பு குறித்து சந்தேகம் தெரிவித்தனர். அதைக் கேட்ட உடனே அதிர்ச்சியில் உறைந்த எனது கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

நான் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த வேளையில், பர்மிங்காம் பெண்கள் மருத்துவமனைக்கு என்னை அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தை நீண்டநாட்களுக்கு உயிருடன் இருப்பது சந்தேகம்தான் எனத் தெரிவித்தனர். மேலும், கர்ப்பத்தைக் கலைப்பதற்கான யோசனையையும் மருத்துவர்கள் எனக்குத் தெரிவித்தனர்.

ஆனால் நானும் எனது கணவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவளும் இந்த உலகில் வாழ வேண்டும் என்றே நாங்கள் விரும்பினோம். பின்னர் ஒரு வழியாக ஜேமி பிறந்தாள். ஜேமி பிறந்த 5 நாட்களிலேயே அவளுக்கு இதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. குழந்தை என்பதால் அந்த நிலையில் அவளைப் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. பின்னர் அவளுக்கு 18 மாதங்கள் கழித்தும் ஓர் அறுவைசிகிச்சையும், வயது முதிர்ந்தவுடன் ஓர் அறுவைசிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அறுவைசிகிச்சைக்குப் பின்னர் ஜேமி தற்போது மிகவும் மகிழ்ச்சியாக அவளது நண்பர்களுடன் விளையாடுகிறாள். ஆனால் ஒரு சில நேரங்களில் மட்டும் அவளது ரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீரற்ற நிலையினால் மூச்சுத்திணறல் உண்டாகிறது. பொதுவாக அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்’’ எனத் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஜேமி.

குழந்தை நலம் பெறட்டும்! 

மேலும் செய்திகள்