இஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.

Update: 2018-07-27 23:00 GMT

ஜெருசலேம்,

சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியில் இஸ்ரேலியர்களை குறி வைத்து பாலஸ்தீனர்கள் காரை மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

அப்படி தாக்குதலில் ஈடுபடும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரோ அல்லது போலீசாரோ சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.

இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள ரமல்லா என்கிற இடத்தில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த 17 வயதான பாலஸ்தீன சிறுவன், அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான்.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுவன் கத்தியால் குத்தியதில் இஸ்ரேலியர்கள் 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதையடுத்து, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சிறுவனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். இதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

இதற்கிடையே தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி 31 வயதான வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இருவரில் 50 வயதான நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பாலஸ்தீன சிறுவன் கொல்லப்பட்டதை கண்டித்து ரமல்லா அருகே உள்ள கோபர் கிராமத்தில் பாலஸ்தீன வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புபடையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும் செய்திகள்