உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ; அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என கூறி அமெரிக்காவில் இனவெறி அடிப்படையில் சீக்கியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

Update: 2018-08-06 05:58 GMT

நியூயார்க்,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேயெஸ் சாலையில் உள்ளூர் வேட்பாளர்களின் பிரசார பணிகளில் 50 வயது நிறைந்த சீக்கியர் ஒருவர் தனியாக ஈடுபட்டு இருந்துள்ளார்.

அந்த வழியே 2 வெள்ளை இனத்தினை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.  வேர்வையில் நனைந்த கருப்பு சட்டை அணிந்திருந்த அவர்கள் சீக்கியர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை.  உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என்றும் அவர்கள் கூச்சலிட்டு உள்ளனர்.  அதனுடன் சீக்கியரின் வாகனம் மீது பெயிண்ட் கொண்டு உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என்றும் அவர்கள் கருப்பு வண்ணத்தில் எழுதியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சீக்கியர் பலத்த காயமடைந்து உள்ளார்.  இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்று வரவழைக்கப்பட்டது.  அதன்பின் அந்த இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி முகநூல் பதிவு ஒன்றில் வெளியிடப்பட்ட தகவலில், இரும்பு தடியால் தாக்குதல்காரர்கள் அடித்தும், சீக்கிய மரபின்படி அவர் அணிந்த தலைப்பாகை அவரை காப்பாற்றி உள்ளது.  பெரிய அளவிலான காயம் தவிர்க்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

உலக அளவில் 5வது இடத்தில் உள்ள பிரபலம் வாய்ந்த மதம் என்ற பெருமையை சீக்கிய மதம் பெற்றுள்ளது.  அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர்.  2018ம் வருட தொடக்கத்தில் இருந்து, இங்கு வாரம்  ஒன்றிற்கு ஒரு சீக்கியர் தாக்கப்படுகிறார் என சீக்கியர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்