அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்

அமெரிக்காவில் இந்திய பேராசிரியரை முக்கிய பதவியில் ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார்.

Update: 2018-08-08 23:00 GMT
நியூயார்க்,

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர், ஆதித்ய பம்ஜாய். இந்தியர். இவர் சட்ட நிபுணரும் ஆவார்.

இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் உரிமையியல் நடைமுறை சட்டம், நிர்வாக சட்டம், மத்திய கோர்ட்டுகள், தேசிய பாதுகாப்பு சட்டம், கணினி குற்றவியல் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார். இவர் ஏல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றவர்.

இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக சேருவதற்கு முன்பாக அமெரிக்க நீதித்துறையில் சட்ட ஆலோசனை அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆன்டனின் ஸ்காலியாவின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

இப்போது இவரை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார். இந்தப் பதவியில் இவர் 2020-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி வரை இருப்பார்.

பயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக அரசு நிர்வாகம் எடுக்கிற முயற்சிகளை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியம் உறுதிப்படுத்தும். அத்துடன் இந்த அமைப்பானது, அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையையும் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்