ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து தாக்குதல் - போலீசார், பாதுகாப்பு படையினர் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதலில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் 19 பேர் பலியாயினர்.

Update: 2018-09-09 18:15 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் தீவிரமாக இருந்தவர் ராணுவ தளபதி அகமது ஷா மசூத். அவர் 2001–ம் ஆண்டு தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். அவருடைய நினைவுநாளையொட்டி ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.

இதனை சீர்குலைக்கும் வகையில் காபூலில் நேற்று இரவு போலீசார் மீது கிளர்ச்சியாளர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 போலீசார் இறந்தனர். இதையடுத்து கிளர்ச்சியாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் வான் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 10–க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோல் ஹெராத் மாகாணத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனைச்சாவடி மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 வீரர்கள் பலியாகினர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததில் 10 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

காபூலில் இன்று தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் இறந்தார். 10–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு இடத்தில் தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

மேலும் செய்திகள்