உலக செய்திகள்
நேபாளத்தில் மர்ம நோய்க்கு 3 பேர் பலி; 400 பேர் பாதிப்பு

நேபாளத்தின் சப்தரி பகுதியில் மர்ம நோயால் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 400 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
காத்மண்டு,நேபாள நாட்டின் சப்தரி நகரில் கஞ்சன்ரூப் நகராட்சி பகுதியில் தீவிர காய்ச்சல், இருமல், மூட்டு வலி, தலைவலி மற்றும் தசை பிடிப்புகள் ஆகியவற்றால் 3 பேர் பாதிப்படைந்தனர்.இவர்கள் பீரத்நகர் பகுதியை சேர்ந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.  ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் திவாஸ் பேஸ்னெட், கிஷோர் ராம் மற்றும் ஊமத் குமார் ராம் ஆகிய 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.  இவர்கள் அனைவரும் 14 வயது உடையவர்கள்.இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் தீவிர காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  தினமும் 20 முதல் 30 நோயாளிகள் சுகாதார நிலையங்களுக்கு வருகின்றனர்.  இதுவரை கடந்த 15 நாட்களில் 400 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த மர்ம நோயை பற்றி பல்வேறு குழுக்கள் தனித்தனியாக ஆய்வு செய்து வருகிறது.  நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.