இங்கிலாந்து உணவகத்தில் மீண்டும் நச்சு பொருள் தாக்குதல்

இங்கிலாந்தில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-18 05:56 GMT
இங்கிலாந்தின்  வில்ட்ஷையர் பகுதியில் சாலிஸ்பரி  என்னும் சுற்றுலா நகரம் உள்ளது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்டேன்ஹெஞ்ச் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தூண்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாலிஸ்பரி பகுதிக்கு அதிகளவில் செல்வார்கள். இதனால் இங்கிருக்கும் உணவகங்கள் மற்றும் விடுதிகள் வார விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டத்தினால் அலை மோதும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சாலிஸ்பரி நகரின் ஹை ஸ்டீரிட் தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இருவரும் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டனர்.

இருவரில்  ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார், அங்கிருக்கும் உணவகத்துக்கு வந்து சென்றவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். உணவகத்தில் சாப்பிட்ட அந்த ஆணும், பெண்ணும் நோவிசாக் என்னும் நச்சுப் பொருள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இத்தகைய நச்சுப்பொருளை ரஷிய உளவுத்துறையினரும், ராணுவத்தினரும் ரகசியமாக பயன்படுத்துவதாக கூறப்படுவதால், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கோய் ஸ்கிர்பால் தனது மகள் யூலியாவுடன் இதே சாலிஸ்பரி நகரில் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் இதே சாலிஸ்பரி நகர் அமெஸ்பரியில் மர்ம நபர்கள் சிலர் வாசனை திரவிய பாட்டில் மூலம் நடத்திய நோவிசாக் தாக்குதலில் டான் ஸ்டர்கெஸ் என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய காதலரான சார்லி ரோவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்