ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டு சிறை

தென்கொரியாவில் 2008–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் லீ மியுங்–பாக் (வயது 76).

Update: 2018-10-05 23:15 GMT

சியோல்,

லீ மியுங்–பாக் தன்னுடைய பதவி காலத்தில் பிரபல செல்போன் நிறுவனத்திடம் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக லீ மியுங்–பாக் மீது வழக்கு தொடரப்பட்டு சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. விசாரணையில் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், ‘‘அனைத்து வி‌ஷயங்களையும் கருத்தில் கொள்ளும் போது, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதை தவிர்க்க முடியாது. எனவே லீ மியுங்–பாக்குக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது’’ என்றார்.

மேலும், 13 பில்லியன் வோன்(தென்கொரிய பணம்) (இந்திய மதிப்பில் சுமார் ரூ.84 கோடியே 83 லட்சத்து 54 ஆயிரம்) அரசுக்கு அபராதமாக செலுத்தவும் லீ மியுங்–பாக்குக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக லீ மியுங்–பாக், நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்