பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் கோர்ட்டில் ஆஜர்

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2018-10-06 23:30 GMT

லாகூர்,

 ஷாபாஸ் ஷெரீப்பை 10 நாள் தேசிய பொறுப்புடைமை முகமையின் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் (வயது 67).

நவாஸ் ஷெரீப், ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவர் இப்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் பதவியை வகிக்கிறார். இவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் இவர் பஞ்சாப் மாகாண முதல்–மந்திரி பதவி வகித்தபோது, ஆசியானா வீட்டு வசதி திட்டத்தில், சவுத்ரி லத்தீப் அண்ட் சன்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, தனக்கு வேண்டிய லாகூர் காசா டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கி ரூ.1,400 கோடி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதே போன்று ரூ.400 கோடி மதிப்பிலான பஞ்சாப் சாப் சானி ஊழலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஊழல் தொடர்பாக தேசிய பொறுப்புடைமை முகமை (லஞ்ச ஒழிப்பு போலீசார்) வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் ஷாபாஸ் ஷெரீப், லாகூர் தேசிய பொறுப்புடைமை முகமை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் லாகூர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நேற்று அவர் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவர் நீதிபதி நஜமுல் ஹசனிடம், ‘‘நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. நான் எப்போதும் நாட்டின் வளத்துக்காகத்தான் உழைத்து வந்திருக்கிறேன். நாட்டை கொள்ளையடித்தவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மீட்டு, அரசிடம் சேர்த்துள்ளேன்’’ என கூறினார்.

அவர் சார்பில் ஆஜரான வக்கீல் அம்ஜத் பெர்வேஸ், சவுத்ரி லத்தீப் அண்ட் சன்ஸ் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ததை நியாயப்படுத்தி வாதிட்டார். அப்போது அவர், சவுத்ரி லத்தீப் ஒரு ஊழல் வழக்கில் தலைமறைவாக உள்ளதாகவும் கூறினார். ஒரு வழக்கில் அவரது நிறுவனம், கருப்பு பட்டியலில் சேர்த்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே ஷாபாஸ் ஷெரீப்பை 15 நாள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பொறுப்புடைமை முகமையினர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி நஜமுல் ஹசன், ஷாபாஸ் ஷெரீப்பை 10 நாள் தேசிய பொறுப்புடைமை முகமையின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

முன்னதாக ஷாபாஸ் ஷெரீப் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கோர்ட்டு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஷாபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷாபாஸ், கட்சியின் மூத்த தலைவர்கள் மாலிக் அகமது ஈசன், மாலிக் அகமது கான் ஆகியோர் மட்டும் கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஷாபாஸ் ஷெரீப் மீதான நடவடிக்கையை பழிவாங்கும் நடவடிக்கை என அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘பஞ்சாப் முதல்–மந்திரியாக ஷாபாஸ் ஷெரீப் பதவி வகித்தபோது, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் தந்து முன் உதாரணம் ஏற்படுத்தி உள்ளார். அவர் மீதான நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (இம்ரான்கான் கட்சி) கட்சிதான் பொறுப்பு. இப்போது அவர்கள் விதைத்திருக்கிறார்கள். ஒருநாள் அவர்கள் அறுவடை செய்ய தயாராக இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இதே கருத்தை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) செய்தி தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப்பும் வெளிப்படுத்தினார்.

மேலும் செய்திகள்