இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்கா கவுரவம்

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகர மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, ஆள் கடத்தல் தடுப்பு ஆலோசகராக இருப்பவர், மினல் பட்டேல் டேவிஸ். இவர் இந்திய வம்சாவளிப்பெண் ஆவார்.

Update: 2018-10-19 21:30 GMT
வாஷிங்டன், 

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகர மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, ஆள் கடத்தல் தடுப்பு ஆலோசகராக இருப்பவர், மினல் பட்டேல் டேவிஸ். இவர் இந்திய வம்சாவளிப்பெண் ஆவார்.

இவர் ஆள் கடத்தலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதற்கு அந்த துறையின் மிக உயரிய விருதான ஜனாதிபதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை அவருக்கு அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வழங்கி கவுரவித்தார்.

இதுபற்றி மினல் பட்டேல் டேவிஸ் கூறும்போது, “ எனது பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் அமெரிக்காவில் முதலில் பிறந்தது நான்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேயர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தேன். இப்போது வாஷிங்டன் வெள்ளை மாளிகை வரை வந்து விட்டேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இவர் உள்ளூரிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு குழுக்களில் இடம்பெற்று ஹூஸ்டன் நகரம் சார்பில் பேசி இருக்கிறார். அது மட்டுமின்றி ஐ.நா. சபையின் உலக மனித உரிமை மாநாட்டிலும் பேசி இருக்கிறார்.

இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றவர் ஆவார்.

மேலும் செய்திகள்