உலகைச் சுற்றி

* தாய்லாந்து நாட்டில் விசா காலம் முடிந்தும் தங்கி இருந்ததாக ராகேஷ் யாதவ் (வயது 21) என்ற இந்தியர் கைது செய்யப்பட்டார். இவர் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

Update: 2018-10-25 18:59 GMT
* மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் நிதி அமைச்சக உயர் அதிகாரி முகமது இர்வான் செரிகர் அப்துல்லா ஆகிய இருவர் மீதும் 1.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரத்து 840 கோடி)அரசு பணத்தை கொள்ளையடித்து விட்டதாக கோலாலம்பூர் கோர்ட்டில் நேற்று புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

* அமெரிக்காவின் கெண்டகி மாகாணம், லூயிஸ் வில்லேயில் ஒரு பலசரக்கு கடையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர், கைது செய்யப்பட்டு விட்டார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

* பாகிஸ்தானில் 29-ந் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் ஆஜர்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஆசாத் கைசரை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

* எந்தவொரு தாக்குதல் முயற்சியில் இருந்தும் வங்காளதேசத்தின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கிற வகையில், பாதுகாப்பு படைகள் மேம்படுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்