மத நம்பிக்கைக்கு எதிராக பேசிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா விடுதலை பாகிஸ்தானில் கலவரம்

மத நம்பிக்கைக்கு எதிராக பேசிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் கலவரம் வெடித்துள்ளது.

Update: 2018-10-31 15:23 GMT

இஸ்லாமாபாத், 


பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவப் பெண்ணான ஆசியா பீவிக்கு 2009–ம் ஆண்டு உடன் வேலை செய்த பெண்களுடன் தண்ணீரை எடுத்துக் குடித்த விவகாரத்தில் வாக்குவாதம் எழுந்தது. ஆசியா பீவி வாதிட்டபோது, அவர் தெய்வ நிந்தனை குற்றம் செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இவ்விவகாரம் கோர்ட்டு சென்றதும் வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து 2010–ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிப்பது வழக்கமான ஒன்று. தெய்வ நிந்தனை அங்கு கொடிய குற்றமாக கருதப்படுகிறது. இதனையடுத்து லாகூர் ஐகோர்ட்டும் அவருடைய மரண தண்டனையை உறுதி செய்தது. 

இதனையடுத்து தெய்வ நிந்தனை வழக்கில் கீழ் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண்ணை விடுதலை செய்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு குறித்து ஆசியா பீவி பேசுகையில், என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் உண்மையிலேயே என்னை விடுதலை செய்து விடுவார்களா? என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 8 ஆண்டுகள் தனிமைச்சிறையில் வாடியவர் ஆசியா பீவி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கிடையே ஆசியா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வன்முறை சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வன்முறை நிலவுகிறது. வன்முறை அதிகரிக்கக்கூடும் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளை பாகிஸ்தான் அரசும், மாகாண அரசுக்களும் உஷார் நிலையில் வைத்துள்ளது.

மேலும் செய்திகள்