நாடாளுமன்ற விதிகளை பின்பற்றி விரைவில் வாக்கெடுப்பு நடத்த சிறிசேனாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-11-03 04:40 GMT
ஜெனீவா,

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நான் பிரதமராக தொடர்ந்து நீடிக்கிறேன். எனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று விக்ரமசிங்கே கூறி வருகிறார். இந்தநிலையில் ராஜபக்சே உடனடி பலப்பரீட்சையை தவிர்க்கும் விதமாக நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா 16-ந்தேதி வரை முடக்கி வைப்பதாக அறிவித்தார்.

இதற்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதனால் இலங்கையில் அரசியலில் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது. இந்தநிலையில், நேற்றுமுன்தினம் பிரதமர் ராஜபக்சே வருகிற 5-ந்தேதி(திங்கட்கிழமை) நாடாளுமன்றம் கூடும் என்று தெரிவித்தார். பின்னர் ராஜபக்சேயின் ஆதரவாளர்கள் இதை மறுத்தனர்.

அதேநேரம் 16-ந்தேதிக்கு முன்பாக நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாது என்று அதிபர் சிறிசேனா கட்சியினர் தெரிவித்தனர். இதனால் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் எப்போது கூடும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையில், நேற்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா நேற்று கொழும்புவில் அளித்த பேட்டியில்,
 “நாடாளுமன்றத்தை வருகிற 7-ந்தேதி கூட்டுவதற்கு அதிபர் சிறிசேனா ஒப்புக் கொண்டு இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். இதனால், நாடாளுமன்றம் வரும் 7 ஆம் தேதி கூடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

பரபரப்பான இந்த சூழலில், இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் தொலைபேசியில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்டர்ஸ், நாடாளுமன்ற விதிகளின் படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, ஐநா பொதுச்செயலாளர் தொலைபேசியில் பேசியதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனா, “ ஐநா பொதுச்செயலாளருடன் தொலைபேசியில் உரையாடினேன். ராஜபக்சே நியமனம் இலங்கை அரசியல் அமைப்பு படியே மேற்கொள்ளப்பட்டதாக அவரிடம் உறுதி அளித்துள்ளேன்” என்றார். 

மேலும் செய்திகள்