பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து

பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து ஏற்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2018-11-11 23:00 GMT
கவாதர்,

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்றது. இந்த விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் தரை இறங்கியபோது சற்றும் எதிர்பாராத விதத்தில் அதன் இரு டயர்களிலும் காற்று இறங்கி விட்டது. இதனால் விமானம் சறுக்கியது. அது, ஓடுதளத்தை கடந்து சென்று நின்றது.

இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓடுதளத்தின் தரைப்பரப்பு மிக மிக மோசமான நிலையில் இருந்ததால் தான் விமானத்தின் டயர்களில் காற்று இறங்கிவிட்டது என தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு பணியாளர்களும், தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளை கவனித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பஞ்ச்குர் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் சிறிது நேரம் விமானப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏர் மார்ஷல் அர்ஷத் மாலிக் அறிக்கை கேட்டுள்ளார். விபத்தில் பணியாளர்களின் தவறு காரணமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்