பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு படையினர் மூலம், இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-11-12 18:00 GMT
கராச்சி,

அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்கள் தங்கள் படகுகளில் கடலோர எல்லையை உறுதிசெய்யும் தொழில்நுட்பங்களை வைத்திருக்காததால் சில சமயங்களில் கவனக்குறைவாக பாகிஸ்தான் நாட்டு நீர்பரப்புக்குள் சென்றுவிடுகின்றனர்.

அப்படி தங்கள் நாட்டு நீர் பரப்புக்குள் வரும் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் உடனடியாக கைது செய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துவிடுகின்றனர்.

இந்த நிலையில், அரபிக்கடல் பகுதியில் 2 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர், தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானின் சிந்து மாகாண கடற்பரப்புக்குள் நுழைந்துவிட்டனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு படையினர் 2 படகுகளையும் சுற்றிவளைத்து, இந்திய மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் கராச்சியில் உள்ள டோக்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்