இலங்கையில் சபாநாயகர்-காவலர்கள் மீது நாற்காலிகளை தூக்கியெறிந்து ராஜபக்சே எம்பிக்கள் ரகளை

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மற்றும் காவலர்கள் மீது நாற்காலிகளை தூக்கியெறிந்து ராஜபக்சே தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-16 11:41 GMT
கொழும்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க  உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்போது மேற்படி வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று நாடாளுமன்றம் கூடியது. பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து குரல் வாக்கெடுப்பினை தொடங்கினார். எனினும் ராஜபக்சே  தரப்பு எம்பிக்கள்  சபாநாயகரின் இருக்கையை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இரு தரப்பு எம்பிக்களும் மோதிக்கொண்டனர்.

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் மற்றும் காவலர்கள் மீது நாற்காலிகளை தூக்கியெறிந்து ராஜபக்சே தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மீது ராஜபக்சே தரப்பினர் தாக்குதல் நடத்தினர். இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே தரப்பு எம்பிக்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் 19-ஆம் தேதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு  பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்