இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மீது மிளகாய்ப் பொடி தாக்குதல்

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மீது ராஜபக்சே எம்பிக்கள் மிளகாய்ப் பொடி தாக்குதல் நடத்தினர்.

Update: 2018-11-16 12:20 GMT
கொழும்பு

இன்று மூன்றாவது நாளாக பரபரப்புக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம்  கூடியது.  சபாநாயகர்  குரல் வாக்கெடுப்பினை தொடங்கினார். எனினும் ராஜபக்சே  தரப்பு எம்பிக்கள்  சபாநாயகரின் இருக்கையை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.  இரு தரப்பு எம்பிக்களும் மோதிக்கொண்டனர்.

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் மற்றும் காவலர்கள் மீது நாற்காலிகளை தூக்கியெறிந்து ராஜபக்சே தரப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மீது ராஜபக்சே தரப்பினர் தாக்குதல் நடத்தினர். இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே தரப்பு எம்பிக்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில்  19-ஆம் தேதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு  பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில்  ராஜபக்சே தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேராத் குற்றஞ்சாட்டினார்.

ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசன வரிசையில் அமர்ந்து, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்