ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் - துபாய் கோர்ட்டு உத்தரவு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என துபாய் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-19 23:00 GMT
துபாய்,

மிக மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தை பெற சில முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.423 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்ததால், 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த பேரத்தில், இடைத்தரகராக செயல்பட்டு ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அவர் துபாய்க்கு சென்றபோது, சர்வதேச போலீசின் நோட்டீசை ஏற்று கைது செய்யப்பட்டார். அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்தது.

இதுதொடர்பான வழக்கில், கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு துபாய் கீழ்கோர்ட்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து துபாய் மேல்கோர்ட்டில் மைக்கேல் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதி அப்தலஜிஸ் அல் ஜரோனி தலைமையிலான அமர்வு, நேற்று மனுவை தள்ளுபடி செய்தது. மைக்கேலை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்