இலங்கையில் 2 போலீசார் சுட்டுக்கொலை - கருணாவுக்கு தொடர்பா?

இலங்கையில் 2 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கருணாவுக்கு தொடர்பு உள்ளதா என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-11-30 23:15 GMT
கொழும்பு,

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுனியாதீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 2 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் துறை மந்திரி ரஞ்சித் மடுமா பந்த்ரா கூறுகையில், சுட்டுக்கொல்லப்பட்ட போலீசாரில் ஒருவர் தமிழர், மற்றொருவர் சிங்களர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் சுமந்திரன் கூறும்போது, போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் கருணா அம்மான் மீது எங்களுக்கு சந்தேகம் வலுக்கிறது. அவர் ராஜபக்சே மந்திரிசபையில் துணை மந்திரியாக இருந்தவர். இதுநாள் வரை அமைதியாக இருந்த கருணா, பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்கிரமசிங்கேவை நீக்கி விட்டு, ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தது முதல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை துணிச்சலாக தெரிவித்து வருகிறார். இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி அவர் மேலும் குழப்பங்களை ஏற்படுத்த முயல்கிறார் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்