கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்

கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2018-12-08 22:30 GMT
வான்கூவர்,

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாயின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள், மெங்வான்ஜவ் கனடா நாட்டில் உள்ள வான்கூவர் நகரில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா விடுத்துள்ள பொருளாதார தடைகளை மீறியதாக ஹூவாய் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்படுகிற நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது, அமெரிக்கா-சீனாவின் உறவில் புதிய மோதலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வான்கூவர் நகர கோர்ட்டில் மெங்வான்ஜவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது கனடா அரசு வக்கீல் ஜான் கிப் கால்ஸ்லே கூறும்போது, “ ஹாங்காங்கில் இருந்து மெக்சிகோ செல்லும் வழியில் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை பற்றி அவருக்கு தெரியும். பல மாதங்களாக அவர் அமெரிக்காவின் விசாரணையை தவிர்த்து வந்திருக்கிறார். அவரை கைது செய்வதற்கு நியூயார்க்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது”என கூறினார்.

மேலும், “ஈரானில் ஹாங்காங்கின் ஸ்கைகாம் நிறுவனம் மூலம் ஹூவாய் நிறுவனம் வர்த்தகம் செய்துள்ளது. மேலும், ஹூவாய் நிறுவனமும், ஸ்கைகாம் நிறுவனமும் வர்த்தகம் செய்வதுபோல அமெரிக்க வங்கிகளை மெங்வான்ஜவ் ஏமாற்றி வந்திருக்கிறார். இவ்விரு நிறுவனங்களும் தனித்தனி நிறுவனங்கள் என்று தோன்றுமாறு செய்துள்ளார். ஆனால் இரண்டும் ஒன்றே” என குறிப்பிட்டார். மேலும் மெங்வான்ஜவ் ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் மெங்வான்ஜவ்வுக்கு ஜாமீன் மறுத்தால் அது நியாயம் இல்லை என்று அவரது தரப்பு வக்கீல் டேவிட் மார்டின் வாதாடினார். இருப்பினும் ஜாமீன் மனு மீது நீதிபதி முடிவு செய்யவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (நாளை) தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மெங்வான்ஜவ் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்