விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவது எப்போது? இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு வந்த உத்தரவு

விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவது எப்போது? இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு நீதிமன்ற உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2018-12-12 12:28 GMT
லண்டன்

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கினார். ஆனால் அதை அவர் திருப்பிச் செலுத்தவில்லை.

இது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் விஜய் மல்லையா (வயது 62) 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் லண்டன் நகரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் விஜய் மல்லையா நாடு திரும்பவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவருடைய சொத்துகளை முடக்கியது.

சி.பி.ஐ.யும் பணமோசடி தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும் தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து அவரை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்தனர். எனினும் அவர் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்னோட் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

சுமார் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி எம்மா ஆர்புத்னோட் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அப்போது, வங்கி மோசடி வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று அவர் உத்தரவிட்டார்.

கோர்ட்டின் இந்த உத்தரவு இங்கிலாந்து உள்துறை செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் நாடு கடத்தும் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இந்த தீர்ப்பின் மூலம் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பு இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவானது பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் விஜய் மல்லையா தொடர்பாக இந்த உத்தரவு வந்துள்ளதை, உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், விஜய் மல்லையாவிற்கு 2 வாரங்களுக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால், அதன் பிறகே இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்