மாலத்தீவு: முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் ரூ.47 கோடி சொத்துகள் முடக்கம்

மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் ரூ.47 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-12-16 18:15 GMT
கொழும்பு,

மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-தேதி நடந்த தேர்தலில் பதவியை இழந்தவர் அப்துல்லா யாமீன். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுகளுக்கு நிதி திரட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஊழல் செய்த பணத்தை தனிப்பட்ட 2 வங்கி கணக்குகளில் அவர் சேர்த்து வைத்திருப்பதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக நாட்டின் நிதித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் அப்துல்லா யாமீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யாமீனுக்கு எதிராக கோர்ட்டில் ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அப்துல்லா யாமீனுக்கு சொந்தமான 6.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.47 கோடி) சொத்துக்களை முடக்க உத்தரவிட்டார். அதன்படி இந்த சொத்துகள் தற்போது முடக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது 5 ஆண்டுகால ஆட்சியில் அங்கு சர்வாதிகார ஆட்சியில் ஈடுபட்டு இருந்த அப்துல்லா யாமீன் தற்போது ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்