ஹபீஸ் சயீத்தை பாதுகாப்பதாக உறுதி அளிக்கும் பாக். மந்திரி, வீடியோ வெளியாகி சர்ச்சை

ஹபீஸ் சயீதை பாதுகாப்போம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியதாக வெளியான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-12-18 02:57 GMT
இஸ்லமாபாத்,

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.  இவரை ஐ.நா., மற்றும் அமெரிக்கா சர்வதேச  பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக சயீத் தொடங்கிய மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யுமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அந்த அமைப்பை அரசியல் கட்சியாக ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது. மேலும், அந்த அமைப்பு அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் மந்திரி  ஷெர்யார் அப்ரிடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஹபீஸ் சயீத்திற்கு ஆதரவாக பேசி இருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷெர்யார் அப்ரிடி பேசியிருப்பதாவது:- “மில்லி முஸ்லீம் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தேர்தல் ஆணையம் அறிவிக்க நாங்கள்( இம்ரான் கான் அரசு) அனுமதிக்க மாட்டோம். 

நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை, ஹபீஸ் சயீத்தையும், பாகிஸ்தானுக்காகவும், உண்மைக்காகவும் குரல் கொடுப்பவர்களையும் பாதுகாப்போம். எங்களது அரசு அவர்களுக்கு என்றுமே துணை நிற்கும். நாங்கள் உண்மைக்கு ஆதரவாக இருக்கிறோமோ இல்லையா என்பதை நாடாளுமன்ற அவைக்கு வந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி வரும் நிலையில், அவரது மந்திரிசபையில்  இருக்கும் உள்துறை இணை மந்திரி ஷெர்யார் அப்ரிடி, ஹபீஸ் சயீதுக்கு ஆதரவாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்