சோமாலியா: அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 22 பேர் பலி

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 22 பேர் பலியாயினர்.

Update: 2018-12-23 17:51 GMT
மொகதிசு,

சோமாலியா தலைநகர் மோகதிசுவில், அதிபர் மாளிகைக்கு அருகே கார் வெடிகுண்டு வெடித்தது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் அந்த பகுதியில் மற்றொரு கார் குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 22 ஆக உயர்ந்துள்ளது.

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் அதிபர் மாளிகை அருகே வந்த வாகனம் ஒன்று, ராணுவ சோதனை சாவடியை நெருங்கியதும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரர்கள், லண்டனை சேர்ந்த டிவி ஊழியர்கள், பத்திரிக்கையாளர் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலே பலியாயினர். மேலும் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை தற்போது 22 ஆக உயர்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்புக்கு அல்கொய்தா தொடர்புடைய அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பினர் மொகதிசு நகரில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் முகமது அப்துல்லாஹி முகமது, "இது கோழைத்தனமான தாக்குதல், தீவிரவாதத்திற்கு எதிரான எங்கள் தாக்குதல் தொடரும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.  

மேலும் செய்திகள்