இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-12-24 15:18 GMT

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் சுனாமி ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.  ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஜாவா கடலை, இந்தியப்பெருங்கடலுடன் இணைக்கிற சுந்தா ஜலசந்தி உள்ளது. அந்த ஜலசந்தியில் அமைந்துள்ள அனக் கிரகட்டாவ் எரிமலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணிக்கு வெடிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத சுனாமி அலைகள் எழுந்தன. 

இந்த பேரலைகள் அந்த நாட்டில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன.  ஜாவா தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டான்ஜங் லீசங் கடற்கரை உல்லாச விடுதி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் பலவும் உருக்குலைந்து போய் விட்டன. ஜாவா தீவில், கடற்கரைகளையும், தேசிய பூங்காவையும் கொண்டிருந்து சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிற பாண்டெக்லாங்கில் சுனாமி பேரலைகள் 160-க்கும் மேற்பட்ட மக்களை வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட்டது.

சுமத்ரா தீவில் செராங் மாவட்டம், தெற்கு லாம்பங், டாங்கமஸ் ஆகிய இடங்களில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  
556 வீடுகள், 9 ஓட்டல்கள், 350 கப்பல்கள் சுனாமியால் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்போது பலி எண்ணிக்கை 373 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  1,459 பேர் காயமடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்