இலங்கை அதிபர் தேர்தல் முன்கூட்டியே நடக்கிறது சிறிசேனா மீண்டும் போட்டியிட வாய்ப்பு

இலங்கை அதிபர் தேர்தல் முன்கூட்டியே நடக்கிறது. கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையின்போது, இதை சிறிசேனா சூசகமாக தெரிவித்தார். அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

Update: 2018-12-25 23:45 GMT

கொழும்பு,

இலங்கை அதிபர் தேர்தல் 2015–ம் ஆண்டு நடந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன், ராஜபக்சேவை தோற்கடித்து சிறிசேனா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விதிமுறைப்படி, 2020–ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் வெளியிடப்பட வேண்டும்.

ஆனால், அடுத்த ஆண்டே அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் சிறிசேனா சூசகமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரா கட்சி தலைவராக இருக்கும் அவர், தனது கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களின் சிறப்பு கூட்டத்தை தனது இல்லத்தில் கூட்டினார்.

அப்போது, தேர்தல் ஆண்டுக்கு தயார் ஆகுங்கள் என்று சிறிசேனா கேட்டுக்கொண்டதாக இலங்கையின் முன்னணி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றுடன் நாடாளுமன்ற பொது தேர்தலும் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியதாக அந்நாளிதழ் கூறியுள்ளது.

ஆனால், கட்சியின் எதிர்கால சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி விவாதித்ததாக சுதந்திரா கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹனா லட்சுமணன் தெரிவித்தார்.

பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்தார். ஆனால், ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. அவர் பிரதமராக செயல்பட கோர்ட்டு தடை விதித்தது.

எனவே, வேறு வழியின்றி, ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். இந்த சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதிபர் தேர்தலை சிறிசேனா முன்கூட்டியே நடத்துகிறார். அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. அடுத்த மாதம் 8–ந் தேதிக்கு பிறகு, அதிபர் தேர்தலை சிறிசேனா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விதிமுறைப்படி, நாடாளுமன்ற பொது தேர்தல் 2020–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்தான் நடக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற தேர்தலும் முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்