கணவனின் கவனக்குறைவால் நடந்த விபத்தில் மனைவி மரணம்; ரூ.38 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவு

அமீரகத்தில் கணவனின் கவனக்குறைவால் விபத்து ஏற்படுத்தி மனைவி மரணம் அடைந்ததால் ரூ.38 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-27 11:24 GMT
கேரளாவை சேர்ந்தவர் பிரவீன் (25) இவரது மனைவி  திவ்யா (25) குழந்தை தக்‌ஷ் (2). இவர்கள் மூன்று பேரும்  ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து  வந்தனர்.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சார்ஜாவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மூவரும் காரில் சென்றனர். விழா முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காரை ஓட்டிய பிரவீன் தூங்கியதால் கார் அங்கிருந்த அறிவிப்பு பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திவ்யா உயிரிழந்த நிலையில் பிரவீனும், குழந்தை தக்‌ஷும் காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து இந்த விபத்தை ஏற்படுத்திய பிரவீன், திவ்யா குடும்பத்துக்கு Dh200,000 ( 38,28,440) பணத்தை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அறிவிப்பு பலகையை சேதப்படுத்தியதற்கு Dh2500 ( 47,855)அபராதமும் செலுத்த உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் பிரவீன் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து பிரவீனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குறித்த தொகையை தயார் செய்து கொடுத்த பின்னர் பிரவீன் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் துபாய் விமான நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு திவ்யாவின் சடலம் கொண்டுவரப்பட்டது. அப்போது பிரவீனும், குழந்தை தக்‌ஷும் உடன் வந்தனர். இதனிடையில் சட்ட நடைமுறைகளை நிறைவுசெய்த பின்னர் காப்பீட்டுத் தொகையை கோர தகுதியுடையவராக பிரவீன் இருப்பார் என தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்