ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற வாலிபர்: மற்றொரு கிட்னியில் நோய் தொற்று ஏற்பட்டு அவதி

ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற வாலிபர் மற்றொரு கிட்னியில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.

Update: 2018-12-31 10:34 GMT
ஐபோன் 4 வெளியான 2011  ஆம்  ஆண்டு காலக்கட்டத்தில் சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞர் சியாவோ வாங் என்பவருக்கு அதன் மீது மோகம் ஏற்பட்டது.

ஆனால், அதற்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. இதனிடையே இணையத்தில் சிறுநீரகம் விற்பது பற்றிய விளம்பரம் ஒன்று அவரின் கண்களில் தென்பட்டது.

சற்றும் யோசிக்காமல், விளம்பரம் கொடுத்திருந்த இடைத்தரகரை தொடர்பு கொண்டு பேசினார். சட்டத்துக்குப் புறம்பாக சிறுநீரகம் விற்பனை செய்யும் மருத்துவமனை ஒன்றுக்கு சியாவோ வாங் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதன்மூலம் அவருக்கு கிடைத்த தொகை 3,200 டாலர்.

அந்த தொகையை வைத்து ஐபோன் ஒன்றை வாங்கினார் சியாவோ வாங். ஆனால், அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே அவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்தது.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் சியாவோ வாங்கின் இன்னொரு சிறுநீரகத்திலும் நோய் தொற்று ஏற்பட்டிருந்தது.

முன்னர் சியாவோ வாங்குக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் முறையாகச் செய்யவில்லை. காயம் சரியாக ஆறாமல் நோய் தொற்று ஏற்பட்டு இன்னொரு சிறுநீரகத்துக்கும் பரவியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட சியாவோ வாங் அதிர்ச்சியில் உறைந்து போனார். வேறு வழியில்லாமல் தற்போது தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மேலும் சிகிச்சைக்கு செலவழிக்க பணமில்லாமல் அவரின் குடும்பம் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் மோகம் ஒரு இளைஞரின் வாழ்க்கையையே பாழாக்கி விட்டது என  சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்