பிலிப்பைன்சை தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸில் புயல் தாக்குதல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 126 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-01-06 23:00 GMT
மணிலா,

பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த மாதம் 29-ந்தேதி பயங்கர புயல் தாக்கியது. அதனை தொடர்ந்து இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின.

மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் 68 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இயற்கையின் இந்த ருத்ர தாண்டவத்தால் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 126- ஐ எட்டியது. மேலும் 26 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்