அமெரிக்க சிறையில் உள்ள மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா, இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா அமெரிக்காவில் சிறைத்தண்டனை முடிவடைவதற்கு முன் இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-01-14 07:46 GMT
வாஷிங்டன்

2008-ஆம் ஆண்டு மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் உட்பட 166 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டனர். அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். பின்னர் அவனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.

மும்பை தாக்குதல் தொடர்பாக  சிகாகோவில் வசித்து வந்த கனடாவை சேர்ந்த தஹவூர் ஹுசைன் ராணா கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2013-ல் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகள் தகவல்படி, ராணா  டிசம்பர் 2021  விடுதலையாக உள்ளான்.

2021-ல் 14 வருட சிறைத்தண்டனை முடிவடைவதற்கு முன் ராணா இந்தியாவுக்கு அனுப்பப்படுவதற்கு "வலுவான வாய்ப்பு" உள்ளது.

இந்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் இந்திய அரசுக்கு "முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. டிசம்பர் 2021-ல் சிறைத்தணடனை முடிவடைவதற்கு முன்பாக ராணாவை ஒப்படைப்பதற்கு  உறுதி செய்ய தேவையான ஆவணங்களைப் பூர்த்திசெய்து வருகிறது.

ராணாவை ஒப்படைப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதற்கும், பயங்கரவாத ஒத்துழைப்பை அதிகரிக்கும் மற்றும் இந்தியர்களின் மத்தியில் அமெரிக்காவின்  மதிப்பு  அதிகரிக்க உதவும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நவம்பர் 2018-ல், மும்பை பயங்கரவாத தாக்குதலின் 10-வது ஆண்டு நினைவு நாளின்போது  டிரம்ப் நிர்வாகம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதிக்கு முன் கொண்டுவருவதற்கான தனது உறுதியை அளித்தது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்