‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை

சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

Update: 2019-01-21 22:45 GMT
லண்டன்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) கடந்த வியாழக்கிழமை கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சான்ட்ரிங்காம் எஸ்டேட்டுக்கு தனது சொகுசு காரில் சென்றார். அவர் ஓட்டிச்சென்ற கார், மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பினார். அவர் காருடன் மோதிய காரை ஓட்டிச்சென்ற பெண்ணும், அவரது தோழியும் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இளவரசர் பிலிப் தனது சொகுசு காரில் மீண்டும் சான்ட்ரிங்காம் எஸ்டேட்டுக்கு சென்றார். அப்போது அவர் ‘சீட் பெல்ட்’ அணியாமல் பயணித்ததாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் அந்நாட்டின் நாளிதழ்களில் வெளியாகின.

இது குறித்து தெரியவந்ததும், போலீஸ் அதிகாரிகள் இளவரசர் பிலிப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது காரில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து இளவரசர் பிலிப்புக்கு போலீசார் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை நடந்த விபத்தில் இளவரசர் பிலிப்பின் கார் மோதி காயம் அடைந்த 2 பெண்களில் ஒருவர், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகள்