கசோக்கியின் உடல் பாகங்கள் கிடக்கும் இடம் பற்றி சவுதிக்கு தெரியாது: வெளியுறவுத்துறை மந்திரி

கசோக்கியின் உடல் பாகங்கள் கிடக்கும் இடம் பற்றி சவுதி அரேபியாவுக்கு தெரியாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-11 05:47 GMT
வாஷிங்டன்,

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வருகிறது. கசோக்கியின் இறந்த உடலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சவூதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி அதேல் அல் ஜூபியர், கசோக்கி உடல் இருக்கும் இடம் பற்றி எங்களுக்கு தெரியாது என்றார். தனது பேட்டியில், அவர் மேலும் கூறுகையில், “  ஜமால் கசோக்கி கொலையை சவூதி அதிகாரிகள்தான் செய்துள்ளனர். இதன் காரணமாக 11 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் கசோக்கியின் உடல் பாகங்கள் எங்கு இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக துருக்கியைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. கசோக்கியின் உடல் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இறுதியில் நாங்கள் உண்மையை கண்டறிவோம்'' என்றார்.

மேலும் செய்திகள்