சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் பாகிஸ்தான் பயணம் தாமதம்

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒருநாள் குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-16 02:21 GMT
இஸ்லமபாத், 

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று (பிப்.16) பாகிஸ்தான் செல்வதாக முதலில் பயண திட்டம் வகுக்கப்பட்ட நிலையில், திடீரென அவரது சுற்றுப்பயண தேதி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாளை (பிப்.17) முகம்மது பின் சல்மான்,  பாகிஸ்தானில் தனது இருநாட்கள் சுற்றுப் பயணத்தை துவங்குவார் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவரது பயண தேதி மாற்றியமைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.  

பாகிஸ்தானில்  குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் செய்யும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், மந்திரிகள், தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்டோரையும் உடன் அழைத்துச்செல்கிறார். சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் முதல் பாகிஸ்தான் பயணம் இதுவாகும். அவரது வருகையை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் புல்வமா பகுதியில், பாதுகாப்பு படையினர் மீது ஜெய்ஷ் இ  முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. இந்த சூழலில், சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்க சவுதி அரேபிய கடந்த மாதம் ஒப்புக்கொண்டது. அதேபோல், மூன்று ஆண்டுகளுக்கு கச்சா எண்ணைய் வழங்குவதிலும் சலுகை வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு,  சவுதி பட்டத்து இளவரசர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். முகமம்து பின் சல்மான் இந்தியா வருவது இதுதான் முதல் முறையாகும். 

மேலும் செய்திகள்