காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Update: 2019-02-17 22:30 GMT
ஜெருசலேம்,

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளின் தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளனர்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ தனது டுவிட்டர் தளத்தில், ‘அன்பு நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடிக்கு, இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோக மயமான இந்த நேரத்தில், உங்களுக்கும், பாதுகாப்பு படையினர் மற்றும் இந்திய மக்களுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம். தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எங்கள் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

இதைப்போல பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பயங்கரவாத தாக்குதலால் மிகுந்த ரணம் ஏற்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கும், உங்கள் மக்களுக்கும், அரசுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுடனும், உங்கள் மக்களுடனும் எங்கள் உடனிருப்பையும், கூட்டணியையும் உறுதிப்படுத்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இறைவன் இரக்கம் காட்டுவாராக’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்