வங்காளதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 70 பேர் பலி

வங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 70 பேர் பலியாகினர்.

Update: 2019-02-21 02:29 GMT
டாக்கா, 

வங்காளதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்று சவுக்பஜார். இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இரசாயன பண்டகசாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த பண்டகசாலையில் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென பரவியது. 

மேலும், தீ விபத்து நடந்த இடம் மிகவும் குறுகலான சாலையைக் கொண்டிருந்தது. அப்போது, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால், மக்கள் அங்கிருந்து தப்பிக்க முடியாமல், சிக்கிக்கொண்டு பலர் தீயில் கருகினார்கள். மேலும், சாலையில் சென்றவர்கள், குடியிருப்புக்கு அருகே இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் என பலரும் தீ விபத்துக்கு இரையாகினர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 70 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால், மேலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  கேஸ் சிலிண்டரில் தீ பற்றி இந்த விபத்து நிகழ்ந்து இருக்கக் கூடும் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சலிமுல்லா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு டாக்காவில் இதேபோன்று இரசாயன பண்டகசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலியாகினர். 

மேலும் செய்திகள்