பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்

பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி, அமெரிக்க வான்தாக்குதலில் பலியானார்.

Update: 2019-02-22 23:00 GMT
பெய்ரூட்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ‘ஸ்டேட் டி பிரான்ஸ்’ மைதானத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி சர்வதேச கால்பந்து போட்டி நடந்தபோது மைதானத்துக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 3 பேர் அடுத்தடுத்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். அதே நேரத்தில் மைதானத்துக்கு அருகில் ஓட்டல்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் அதிபயங்கர தாக்குதலை நடத்தினர்.

நாட்டை உலுக்கிய இந்த தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உள்நாட்டை சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாதியான பேபியன் கிளெயின், இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். பின்னர் அவர் அதே ஆண்டு சிரியாவுக்கு தப்பி ஓடினார். இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான அல்-பக்குஸ் நகரில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான் தாக்குதலில் ஈடுபட்டன.

இதில் பேபியன் கிளெயின் கொல்லப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க கூட்டுப்படைகள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்