முதல் முறையாக பெண் நியமனம்: அமெரிக்க தூதரானார் சவுதி இளவரசி

முதல் முறையாக, சவுதி இளவரசி அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டார்.

Update: 2019-02-24 23:00 GMT
ரியாத்,

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ‘சவுதி அரேபியா விஷன் 2030’ என்ற தொலைநோக்குத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். அதன்படி பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் இளவரசியான ரீமா பிண்ட் பாண்டர் அல் சவுத் அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சவுதி அரசில் தூதர் பதவியை ஏற்கும் முதல் பெண் என்கிற பெருமையை அவர் பெறுகிறார்.

ரீமாவின் தந்தை பாண்டர் அல் சுல்தான் சவுத் 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை அமெரிக்க தூதர் பொறுப்பில் இருந்தார். இதன் காரணமாக ரீமா தனது குழந்தை பருவத்தை அமெரிக்காவில் கழிக்க நேர்ந்தது. அவர் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியக படிப்பில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் 2005-ம் ஆண்டு ரியாத் திரும்பிய ரீமா பொது மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வந்தார். பாலின சமத்துவம் குறித்து அதிகம் விமர்சிக்கப்படும் சவுதி அரேபியாவில் இளவரசி ரீமா பெண்களுக்கான உரிமைகள் குறித்து பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்