தென் ஆப்பிரிக்காவில் உரிமம் இன்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய என்ஜினீயர்

தென் ஆப்பிரிக்காவில் உரிமம் இன்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய என்ஜினீயர் குட்டு அம்பலமானதால் பதவி விலகினார்.

Update: 2019-03-02 22:15 GMT

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா ஏர்வேஸ் நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக விமானியாக பணியாற்றி வந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கு விமானத்தை ஓட்டிச் சென்றபோது, விமானத்தை அவர் ஓட்டியவிதம் சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். இது தொடர்பாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து விமான நிறுவனம், அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர் வைத்திருந்தது போலியான உரிமம், முறையான விமானி உரிமம் அல்ல என கண்டுபிடித்தது.

அவர் மீது விமான நிறுவனம், கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதன் காரணமாக அவர் பதவி விலகி உள்ளார்.

இவர் 1994–ம் ஆண்டு விமானியாக பணியாற்றுவதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா ஏர்வேஸ் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார்.

அங்கு விமானிகள், ஏ.டி.பி.எல். என்று அழைக்கப்படுகிற ஏர்லைன் போக்குவரத்து விமானி உரிமம் பெற்றிருந்தால்தான் நீண்ட தொலைவு விமானங்களை இயக்க முடியும். இந்த விமானிகளை பல்வேறு தொழில் நுட்ப, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த உரிமத்தைப் பெறாமல், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி அவர் 25 ஆண்டுகள் விமானம் ஓட்டி இருக்கிறார் என்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்