ஏமனில் பீரங்கி குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு

ஏமனில் பீரங்கி குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-03-03 22:15 GMT
ஏடன்,

ஏமனில் அதிபர் ஆதரவு அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சவுதி கூட்டுப்படைகளின் உதவியோடு கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள நகரை அரசு படைகள் மீட்டுவருகின்றன. அதே போல் அரசு படைகள் வசம் உள்ள நகரங்களை கைப்பற்றுவதற்காக கிளர்ச்சியாளர்கள் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஹொடைடா மாகாணத்தில் அரசு படைகள் வசம் உள்ள துயாட்டா நகரில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பீரங்கி குண்டுகளை வீசினர். தொடர்ச்சியாக 45-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பீரங்கி குண்டு வீச்சில் சிக்கி அப்பாவி மக்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்