சவுதி பத்திரிகையாளர் கசோகி உலையில் வைத்து எரிக்கப்பட்டார்? அதிர்ச்சி தகவல்

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் கசோகி, தூதரின் இல்லத்தில் உள்ள உலையில் வைத்து எரிக்கப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-03-04 11:25 GMT
இஸ்தான்புல்,

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர்  2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். இதை முதலில் சவுதி அரேபியா மறுத்து வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு கடந்த சனிக்கிழமை சவுதி அரேபிய அரசு ஒப்புக்கொண்டது. எனினும் அதை சண்டையில் ஏற்பட்ட மரணம் என்று மட்டுமே தெரிவித்தது. பின்னர்தான் சவுதியிலிருந்து அனுப்பப்பட்ட குழு அவரை கொன்றது என தெரிய வந்தது. இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.

வெட்டப்பட்ட அவரதுஉடல் பாகங்கள் உள்ள பிளாஸ்டிக் பைகள், துணை தூதரகத்துக்கு அருகில் உள்ள சவூதி தூதரின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தூதரின் வீட்டுச்சுவற்றில் ரத்தக்கறைகள் கண்டறியப்பட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் துணை தூதரகத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் கசோகி, தூதரின் இல்லத்தில் உள்ள அடுப்பில் வைத்து எரிக்கப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அல் ஜஸீரா தொலைக்காட்சி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது,

சவூதி  துணை தூதரின் இல்லத்தில் சமீபத்தில் கொதி உலை (சூளை) ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த உலையானது சுமார் 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தாங்கக்கூடிய ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. இது முழுவதுமாக துணை தூதரின் ஆலோசனையின்படி உருவாக்கப்பட்டது. இந்த பணிகளை துருக்கிய அதிகாரிகள் கண்காணித்தார்கள் என்று கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர் ஒருவர் அல் ஜஸீரா தொலைக்காட்சி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்