இம்ரான் கானை பதவி நீக்கம் செய்யக்கோரும் மனு: பாக்.நீதிமன்றத்தில் நாளை விசாரணை

இம்ரான் கானை பதவி நீக்கம் செய்யக்கோரும் மனுவை லாகூர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

Update: 2019-03-10 01:22 GMT
இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, வேட்புமனுவில் தவறான  தகவலை அளித்ததற்காக பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரும் மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் நாளை (மார்ச் 11) விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த அனாலூய்சா ஒயிட் என்பவரது மகள் டிரியன் ஒயிட், இம்ரான் கானுக்குப் பிறந்தவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. எனினும், பாகிஸ்தான் மக்களவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இம்ரான் கான், தனது வேட்புமனுவில் டிரியன் ஒயிட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், தனக்கு பிரிட்டனில் ஒரு மகள் இருப்பதை வேட்புமனுவில் மறைத்ததன் மூலம், பிரதமர் இம்ரான் கான் அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் கூறி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனுவில் உண்மையை மறைத்துள்ளதன் மூலம், நாட்டின் பிரதமர் நேர்மையானவராக,  இருக்க வேண்டும்  என்ற அரசியல் சாசனத்தின் 62 மற்றும் 63-ஆவது பிரிவுகளை மீறியுள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அந்த மனுவை, லாகூர் நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை விசாரணைத்து எடுத்துக்கொள்ளவிருக்கிறது. இந்த தகவல்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இதே போன்ற மனுவை, அந்த நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்தது நினைவிருக்கலாம். 

மேலும் செய்திகள்